கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க உறுப்பினர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தியும், கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராகவும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்னால் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை அடக்குமுறைக்காக பயன்படுத்தாதே, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்டவர்களை உடனே விடுதலை செய், கொத்தலாவல மசோதாவை கிழித்தெறி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்நியவாறு கோசமெழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அடக்குமுறை மற்றும் சர்வாதிகார போக்குக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சங்கத்தினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.