February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்கத் தூதுவர்-வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில்,கொவிட்-19 தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கும், எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதார தாக்கத்தை தணிப்பதற்கும் வழங்கப்பட்ட உதவிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

யு.எஸ். எயிட் ஊடாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஒக்சிமீட்டர்கள் போன்ற அவசர மருத்துவப் பொருட்களையும், கோவெக்ஸ் திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளையும் அனுப்பியமைக்காகவும் அமெரிக்க அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இரு நாடுகளும் அனுபவித்து வரும் வலுவான அரசியல் மற்றும் பொருளாதார இருதரப்பு ஒத்துழைப்பை பயன்படுத்தி, அமெரிக்காவிலிருந்து மேற்கொள்ளப்படும் தனியார் துறை முதலீடுகளையும் வெளிவிவகார அமைச்சர் இதன்போது வரவேற்றார்.

பங்காண்மை உரையாடல் மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டு ஆணைக்குழு உள்ளிட்ட ஏனைய இருதரப்பு விடயங்கள் குறித்தும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.