July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மிகப்பெரிய எரிபொருள் நெருக்கடி நிலையொன்று நாட்டில் ஏற்படப்போகின்றது; ஜே.வி.பி கூறுகின்றது.

அடுத்த காலாண்டுக்கான சர்வதேச கடன்களை செலுத்துவதா அல்லது எரிபொருளுக்கான கடன்களை செலுத்துவதா என்ற பாரிய நெருக்கடி நிலையொன்று நாட்டில் ஏற்பட்டுள்ளதாகவும்,இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செலுத்த வேண்டியுள்ள 3.3. பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை செலுத்தாது கைவிட்டுள்ள நிலையில், இலங்கைக்கான எரிபொருள் கொள்வனவு செய்வதில் அரச வங்கிகள் பிணை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலையொன்று உருவாகப் போகின்றதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடன் நெருக்கடியை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இந்த நெருக்கடி நிலைமைகளில் இறுதியாக மக்களே கடன் சுமைகளை சுமக்க நேரும்.வெளிநாட்டு கையிருப்பாக ஜூன் மாத இறுதியில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளது.

ஆகஸ்ட் மாதமளவில் இந்த கையிருப்பும் குறைவடையும்.இதற்குள் தான் எரிபொருள் கொள்வனவு, இறக்குமதி, வங்கி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இன்று நாட்டில் பெற்றோல், டீசலுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பெற்றுக் கொண்ட எரிபொருளுக்கான நிதியை இன்னமும் செலுத்தவில்லை.

இந்நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை வங்கிக்கும், மக்கள் வங்கிக்கும் கொடுக்க வேண்டிய 3.3.பில்லியன் அமெரிக்க டொலர் இன்னமும் கொடுக்கப்படாது உள்ளது.எனவே எரிபொருள் கொள்வனவு செய்வதில் வங்கிகள் பிணை வைப்பதில் நெருக்கடிகளை சந்திக்கும் நிலைமை நேர்ந்துள்ளது.ஆகவே நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலையொன்று உருவாகப் போகின்றது.

புதிய நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, அமெரிக்க தூதுவரை சந்தித்துள்ளார், இந்திய தூதுவரை சந்தித்துள்ளார். அரசாங்கம் சந்தித்துள்ள இந்த நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளாரா? சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதா இல்லையா? அல்லது வேறு கடன்களை பெற்றுக் கொள்ள அரசாங்கத்தினால் முடியுமா? இப்போது வரையில் அரசாங்கம் இது குறித்து எடுத்துள்ள தீர்மானம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

அரசாங்கம் இப்போதே தவறான பல தீர்மானங்களை முன்னெடுத்து நெருக்கடிகளை மேலும் அதிகரித்துள்ளது.சர்வதேச பிணை முறிகளை கொண்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்தி விட்டது.எனவே தேசிய முதலீட்டாளர்களுக்கு அதற்கான வாய்ப்புகளை வழங்க தீர்மானம் எடுத்துள்ளது.இது மிகப்பெரிய நெருக்கடி நிலையாகும்.நாட்டின் கடன்களை மேலும் அதிகரிக்கும் நிலையை இந்த தீர்மானம் உருவாக்கும் என்று அவர் மேலும் கூறினார்.