நாட்டிற்கு தேவையான வேலைத் திட்டத்தை யார் முன்னெடுப்பதென்பது முக்கியமல்ல.இராணுவ மயம் என்பதை விடவும் இறுதியாக எமக்கு கிடைக்கும் பெறுபேறுகள் என்னவென்பதே முக்கியமானதாகும் என தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, நாட்டின் அவசரகால நிலைமைகளில் இராணுவம் தலையிடுவதனாலோ அல்லது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னாள் இராணுவ அதிகாரி என்ற காரணத்தினாலோ என்னவோ இப்போது இராணுவ மயமாக்கல் குறித்து பேசும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இராணுவ மயமாக்கல் என்ற வார்த்தையை ஒவ்வொருவரும் தமக்கு தேவையான விதத்தில் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இராணுவ மயம் என்பதை விடவும் இறுதியாக எமக்கு கிடைக்கும் பெறுபேறுகள் என்னவென்பதே முக்கியமானதாகும். முயற்சிகளை விடவும் பெறுபேறுகளையே நாம் எதிர்பார்க்கின்றோம்.
நாட்டிற்கு தேவையான வேலைத்திட்டத்தை யார் செய்வது என்பது முக்கியமல்ல.உதாரணமாக கூறுவதென்றால் நாட்டில் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை இராணுவம் முன்னின்று செய்து வருகின்றது.இதன்போதும் இராணுவ மயமாக்கல் என்ற கருத்தையே முன்வைத்தனர்.ஆனால் நாம் அவற்றை செவிமடுத்து எமது செயற்பாடுகளை நிறுத்தியிருந்தால் இன்று நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும்.இராணுவம் எப்போதும் துடிப்புடன் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற காரணத்தினால் தான் இன்று எட்டரை மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.