July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கோட்டாபய,மஹிந்த ஆகியோர் பலவீனப்பட்டுவிட்டனர்’; ஹர்ஷ டி சில்வா

நாடாக முன்னோக்கி செல்வதில் நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற நிலையில்,நாட்டின் ஜனநாயகத்தை அடக்குவதன் மூலமாக சர்வதேசத்தை மேலும் அதிருப்திக்குள்ளாக்கும் நிலைமையே உருவாகியுள்ளதெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினாலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினாலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியவில்லை என்பதை பஷில் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசம் மூலமாக அரசாங்கமே வெளிப்படுத்திவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்

நாட்டில் இனவாதத்தை பரப்பி ஆட்சிக்கு வந்தவர்கள்,தனி சிங்கள அரசாங்கத்தை உருவாக்குவதாக கூறியவர்கள் தமக்கு அதிகாரத்தை பெற்றுக் கொள்ள 20 ஆவது திருத்தத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என்ற நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் தயவை நாடியதில் இருந்தே அரசாங்கத்திற்குள் குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டது.

அத்துடன் நின்றுவிடாது பஷில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தவுடன் அடுத்த கட்டத்தில் அவரை ஜனாதிபதியாக்கும் நோக்கத்தில் அரசாங்கத்தில் ஒரு அணியினரை வெளியேற்ற முயற்சிகள் எடுக்கப்படுவதாகவே எமக்கு தெரிகின்றது.

அதேபோல் ஜனநாயகத்தை நாசமாக்கும் 20 ஆவது திருத்தத்தை ஆதரித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல,எதிர்க்கட்சியின் பக்கம் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களும் பொறுப்புக்கூற வேண்டும். மக்களின் வாக்குகளில் பாராளுமன்றத்திற்கு வந்தவர்கள்,இறுதியாக பணத்திற்கு விலை போனதே இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணமாகும்.

அதேபோல், அரசாங்கத்திற்குள் இருக்கும் பிரச்சினைகளை மறைத்துக் கொள்ள நாட்டில் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.இலகுவாக தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்காது நிலைமைகளை மேலும் குழப்பியடிக்கவே நினைக்கின்றனர்.

அனாவசிய கைதுகள்,அடக்கு முறைகள் என்பன ஜனநாயக விரோத செயற்பாடாகும்.நாடாக முன்னோக்கி செல்வதில் சிரமப்பட்டுள்ள நிலையில்,நாட்டின் ஜனநாயகத்தை அடக்குவதன் மூலமாக சர்வதேசத்தை மேலும் அதிருப்திக்குள்ளாக்கும் நிலைமையே உருவாகிக் கொண்டுள்ளது. நாட்டின் கடன் நெருக்கடிகளை தீர்க்க முடியாத நிலைக்கு அரசாங்கம் நிலைமைகளை உருவாக்கிக் கொண்டுள்ளது.

நாட்டில் உற்பத்தி முழுமையாக முடங்கியுள்ளது.இன்று நாம் லெபனான் போன்று கடன் நெருக்கடிக்குள் விழும் நிலையே உள்ளது. எமது நாட்டின் கடன்களை வேறு நாட்டு கடனுடன் ஒப்பிட முடியாது. எம்மால் செலுத்த முடியும் என்றால் மட்டுமே கடன் எடுக்க வேண்டும். அதனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.