January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கடும் கட்டுப்பாடுகளுடன் பருத்தித்துறை முடக்கப்பட்டது

யாழ்ப்பாணம்,பருத்தித்துறை நகர் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி மருந்தகங்கள் உட்பட,வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்படவேண்டும் என்று சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கிகள் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் திறக்க முடியும்.பருத்தித்துறை நகரில் இருந்து பேருந்து தரப்பிடம் மூடப்பட்டுள்ளதால் டிப்போ சந்தியிலிருந்து பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் உடன் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பருத்தித்துறை சந்தை வியாபாரிகள் மூவருக்கு தொற்று உள்ளமை அன்டிஜன் பரிசோதனையில் தெரியவந்ததனையடுத்து சந்தை முடக்கப்பட்டது.

பருத்தித்துறை பெருநகர், 401 கிராம அலுவலகர் பகுதிகளில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ள அதேவேளை, பருத்தித்துறை 3 ஆம் குறுக்குத் தெரு, தும்பளை வீதி, பத்திரகாளி வீதி, வீ எம் வீதி, கடற்கரை வீதி, கொட்டடி வீதி அனைத்திலிருந்து நகருக்குள் உள் நுழைய முடியாது.

இந்நிலையில்,யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவர் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

அத்துடன் வியாழன் இரவு 8 மணிக்கு சுழிபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவரும் கொவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.