நாட்டில் கல்வி சீர்திருத்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர், காலத்துக்குப் பொருந்தும் கல்வித் திட்டங்களை முன்மொழிய வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
பெருநகர பல்கலைக்கழகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி கோட்டாபய இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வியை முன்னிறுத்தி அரசியல் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கான ஆர்ப்பாட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்ட உறுதிமொழியின் கீழ் முதலாவது பல்கலைக்கழகம் கேகாலை மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்சார் சந்தையை இலக்காகக் கொண்ட திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் நோக்கத்துடன், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பெருநகர பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெறும் மாணவர்களில் 80 சதவீதமானோர் பல்கலைக்கழக வாய்ப்பை இழப்பதாகவும், அவர்களை இந்தத் திட்டத்தின் மூலம் உள்வாங்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
“பல்கலைக்கழக பட்டமொன்றைப் பெற்றுக்கொள்ளும் பல பட்டதாரிகளும், அரச தொழிலை எதிர்பார்க்கின்றனர். எனினும், அரசாங்கத்தின் பொறுப்பு, தொழில்களை வழங்குவதல்ல.
மாறாகத் தொழில்களை உருவாக்கும் ஒரு விரிவான பொருளாதார சூழலை உருவாக்குவதாகும்.
பெருநகர பல்கலைக்கழகத் திட்டத்தின் மூலம், பொருளாதாரத்தில் நேரடியாகத் தொடர்புபடக்கூடிய அல்லது சுய தொழிலில் ஈடுபடக்கூடிய அறிவுள்ள ஒரு நபரை, பட்டப்படிப்பின் முடிவில் உருவாக்க எதிர்பார்க்கின்றோம்” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.