கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி நகர சபையின் ஆட்சியை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றியுள்ளது.
நகர சபையின் தலைவராக பதவி வகித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான சஷங்க சம்பத் சஞ்ஜீவவை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளிலிருந்து நீக்கி, அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து வெற்றிடமான உறுப்பினர் ஆசனத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி புதிய உறுப்பினரை நியமித்திருந்தது.
இந்நிலையில் சபையில் வெற்றிடமான தலைவர் பதவிக்காக இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அமல் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
15 உறுப்பினர்களை கொண்ட நாவலப்பிட்டி நகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 5 பேரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் மூவரும் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று நடத்தப்பட்ட தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் புதிய தலைவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.