July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாவனைக்கு பொருத்தமற்ற சீனி, நெத்தலி கொட்டாஞ்சேனையில் கைப்பற்றல்

கொழும்பு – கொட்டாஞ்சேனை சிவானந்தன் தெருவில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் இருந்து பாவனைக்கு  பொருத்தமற்ற நெத்தலி மற்றும் சீனி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாண புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நுகர்வோர் அதிகார சபையும், மேல் மாகாண புலனாய்வு பிரிவும் இணைந்து இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளது.

இதன்போது, 15 கிலோ பெறுமதியுடைய 1,200 நெத்தலி மூடைகளும், 50 கிலோ பெறுமதியுடைய 9 சீனி மூடைகளும் நுகர்வோர் அதிகார சபையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், இவ்வாறு கைப்பற்றப்பட்ட பாவனைக்கு பொருத்தமற்ற நெத்தலிகளை  விலங்குகளின் உணவு விற்பனைக்காக கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன்படி, குறித்த நெத்தலி தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவற்றை விற்பனை செய்ய நுகர்வோர் அதிகார சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 50 இலட்சத்துக்கு மேல் இருக்கலாம் என்று நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுகர்வோர் அதிகார சபையினால் கைது செய்யப்பட்ட கடை முகாமையாளர் மாலிகாகந்த மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளுக்கு பிறகு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.