பிரிட்டன் தொடர்பான மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக சீனா கொண்டுவந்த அறிக்கையை இலங்கை ஆதரித்தமை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தையும் பாதிக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
பிரிட்டன் தம்மிடம் மேலதிகமாக உள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ரா செனிகா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க உறுதிகொண்டுள்ள நிலையில், அரசாங்கம் இவ்வாறானதொரு அறிக்கையில் கையொப்பம் இட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நாட்டின் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை ஆபத்தில் தள்ளிவிட வேண்டாம் என்றும் குறித்த கட்சி அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது.
சிலரது கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு தடுப்பூசிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டாம் என்று பிரிட்டனை ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.