சீன நிறுவனங்கள் இலங்கையில் மின் உற்பத்தி செய்ய முடியுமான விதத்தில் சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக மின்சார தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
சீனா உட்பட வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட முடியுமான விதத்தில் இலங்கை மின்சார சட்டத்தை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக இலங்கை மின்சார ஊழியர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சீன நிறுவனங்கள் இலங்கையில் சூரிய மற்றும் காற்று சக்திகளைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தியில் ஈடுபடுவதற்கான வசதிகளைச் செய்துகொடுக்க அரசாங்கம் தயாராகுவதாக இலங்கை மின்சார ஊழியர்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேசிய நிறுவனங்கள் மின்சார அலகு ஒன்றை 8 ரூபாய்க்கு வழங்கும் போது, வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து மின்சார அலகு ஒன்றை 22 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை தயாராகுவதாகவும் குறித்த ஒன்றியத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார ஊழியர்கள் ஒன்றியத்தின் குற்றச்சாட்டுக்களை மின் வலு அமைச்சின் செயலாளர் வசன்த பெரேரா மறுத்துள்ளார்.
இலங்கை மின்சார சட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அதுதொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி ஒரு குழுவை நியமித்துள்ளதாகவும் மின் வலு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.