January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாகன சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை

வாகன அபராதத்தை மின்னணு முறையில் செலுத்துதல் மற்றும் சாரதிகளுக்கு புள்ளிகளை வழங்கும் முறையை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சாரதிகளுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை செயல்படுத்த சட்டங்கள் மற்றும் தரவு அமைப்புகள் இருக்கின்ற போதிலும் அதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, வீதிகளில் சாரதிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் யாசகங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதேவேளை, நாளாந்தம் இடம்பெறும் விபத்துகளில் பெரும்பாலும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி மற்றும் பாதசாரிகளே உயிரிழப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் நிமித்தமே சாரதிகளுக்கு நன்நடத்தை புள்ளிகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இந்த முறைகளை பயன்படுத்துவதன் ஊடாக சிறந்த பிரதிபலன் கிடைத்துள்ளது.

இது தவிர, வீதிகளின் குற்றமிழைக்கும் சாரதிகள் மற்றும் ஏனைய தரப்பினரை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக கண்காணித்து உரிய அபராதங்களை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கமராக்களையும் சென்சர்களையும் பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களமும், மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் காரியாலயமும், போக்குவரத்து அமைச்சும் ஒன்றிணைந்து வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.