February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்’

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பாராது அவர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

இதில் ஜோசப் ஸ்டாலின், பியுமி ஹன்சமாலி, வி.ஐ லெனனின், கால் மாஸ்க் அல்லது அட்டுளுகமவில் சுகாதார பரிசோதகரின் முகத்தில் துப்பிய மொஹமட் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வரும் வரையில் தொழிற்சங்கங்கள் தங்கள் போராட்டங்களை கைவிடவேண்டும் என சுகாதார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாடு சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழலில், அரசியல் நோக்கங்களுடன் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கொரோனா பெருந்தொற்று என்பது சர்வதேச நிகழ்வாகும்.அது தற்போதைய அரசாங்கத்தின் அரசியல் சுலோகமில்லை. கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கும், உயிர்களை காப்பாற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் காரணமாகவே சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சுகாதர வழிகாட்டுதல்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்த வழிகாட்டுதல்கள் தனி நபர்களிற்கானவையோ அல்லது குழுக்களுக்கானவையோ இல்லை. முழு நாட்டிற்குமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சுகாதார பணியாளர்களிற்கு உதவுவதற்குமே பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.