January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக ராஜபக்‌ஷவினர் செயற்படுகின்றனர்; அனுரகுமார திசாநாயக

நாட்டின் தேசிய வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் சூறையாடுவதற்காக அமெரிக்க பிரஜைகளை ஜனாதிபதி ஆசனத்திலும், நிதி அமைச்சு ஆசனத்திலும் அமரவைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இலங்கையில் எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் உரிமத்தையும், மிதக்கும் களஞ்சியசாலையை உருவாக்கும் அனுமதியையும், அமெரிக்க நிறுவமொன்றுக்கு பெற்றுக்கொடுக்க அமெரிக்க பிரஜைகளான ராஜபக்‌ஷவினர் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், பொருளாதாரத்திற்கும் பாரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் அமைச்சரவை பத்திரமொன்றும் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது கெரவலபிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதமான உரிமத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் உடன்படிக்கை ஒன்றினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றார்.

மின் அமைச்சர் டலஸ் அழகபெரும உள்ளிட்ட பலருக்கு இந்த அமைச்சரவை பத்திரம் என்னவென்றே தெரியாது என்பது என்னால் உறுதியாக கூற முடியும். வலுசக்தி அமைச்சருக்கும் அதே நிலைமையே ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் பலருக்கு தெரியாது மறைமுகமாக அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்படுகின்றது. பலர் ஏமாற்றப்பட்டு நிதி அமைச்சரின் தேவைக்கு அமைய இந்த அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கையில் அமெரிக்க தலையீடுகளை கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்த அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் உள்ளனர், இந்த விடயத்தில் அவர்களின் நிலைப்பாடு என்னவென்பதை கூற வேண்டும்.

அரசாங்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் கொள்கையை கையாண்டு வருகின்றது. துறைமுக நகர் திட்டத்தை உருவாக்கியதன் மூலமாக சீன நிறுவனத்திற்கு பாரிய அளவிலான பலத்தையும் அதிகாரத்தையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

தற்போது திருகோணமலை எண்ணெய் குதங்கள் மற்றும் திருகோணமலை துறைமுகத்தை இந்திய தேவைகளுக்காக பெற்றுக் கொடுக்கும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தேசியத்தை உடல் பூராகவும் பூசிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் இன்று நாட்டினை கூறுபோடும் ஆட்சியை முன்னெடுத்து வருகிறனர்.

பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள பொருளாதார போர்க் களத்தில் போட்டியிடும் மத்திய நிலையமாக இலங்கையை உருவாக்கியுள்ளனர் என்றார்.