நாட்டுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய பணம் இல்லாத காரணத்தினாலேயே அரசாங்கம் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரத்தை இறக்குமதி செய்ய பணம் இல்லாத காரணத்தினால் சேதன உரத்தை பயன்படுத்துமாறு அரசாங்கம் விவசாயிகளுக்கு கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையால் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும், 400 கோடி டொலரே கையிருப்பில் இருப்பதாகவும் ரணில் தெரிவித்துள்ளார்.
இலங்கை இவ்வருடத்தில் பிணைமுறி கடனாக 100 கோடி டொலரை செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து கையிருப்பு 300 கோடி டொலர் வரை குறைவடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வர்த்தக வங்கிகளிலும் டொலர் கையிருப்பு இல்லை என்றும் வங்கிகள் கடனில் உள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
டொலரை செலுத்த முடியாத காரணத்தினால் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த எரிபொருள் கப்பலொன்று நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும், டொலரை செலுத்தாவிட்டால் எரிபொருள் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் உறுப்பு நாடுகளுக்கு 6500 கோடி டொலரை பகிர்ந்தளிக்க தீர்மானித்துள்ளதாகவும், அதன்மூலம் இலங்கைக்கு 80 கோடி டொலர் கிடைக்கும் என்று ரணில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பணத்தை தேடுவதற்கு அரசாங்கத்திடம் மாற்றுவழிகள் இல்லை என்றும் ரணில் குற்றம்சாட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பை பேணி, தேவையான நிதியை பெற்றுக்கொள்ள முடியும் என்று விக்ரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் சான்றிதழ் இலங்கைக்கு கிடைக்குமாக இருந்தால், இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பொருளாதார நெருக்கடி தொடர்ந்தால் அடுத்த வருட நடுப்பகுதியில் தொழில்வாய்ப்பின்மை, உணவுத் தட்டுப்பாடு போன்றன ஏற்படலாம் என்றும் ரணில் எச்சரித்துள்ளார்.