“எமது அரசாங்கத்தில் எந்தவித குழப்பங்களும் இல்லை.ஆனால் இரட்டை வேடமிட்டு அரசாங்கத்தை குழப்பியடிக்க எம்முடன் ஒட்டிக்கொண்டுள்ள சிலர் முயற்சிக்கின்றனர்” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகரவே அரசாங்கத்தில் குழப்பங்களை உருவாக்குகின்றார் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.
ராஜபக்ஷவினரின் அரசாங்கத்தை அமைப்பதில் ஆரம்பத்தில் கைகொடுத்த நபர்களுக்கு அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே எவரையும் நிராகரிக்கவில்லை.
ஆனால் அரசாங்கத்தில் இருந்து கொண்டு ராஜபக்ஷவுடன் முரண்படும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது. அரசாங்கமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பொறுத்தவரை அவர்களுக்கு அரசாங்கத்தில் வழங்க வேண்டிய இடத்தை வழங்கியுள்ளோம். தயாசிறி ஜெயசேகரவிற்கு அமைச்சுப் பதவியில் திருப்தி இல்லை.
இது குறித்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறுகையில், அரசாங்கத்திற்குள் நெருக்கடியை ஏற்படுத்த யாரும் செயற்படவில்லை.அரசாங்கத்திற்குள் பல்வேறு கட்சியினர் ஒன்றிணையும் போது பல முரண்பாடுகள் ஏற்படும். அதனை பாரிய சர்ச்சையாக நாம் கருதவில்லை என்றார்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் சிலர் இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜனவரி 8 ஆம் திகதி வரைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருந்தவர்கள் அடுத்தநாள் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்தமை நினைவில் உள்ளது.
இவர்கள் இன்றும் அரசாங்கத்திற்குள் இரட்டை வேடமிட்டு அரசாங்கத்தை குழப்பியடிக்க நடவடிக்கை எடுக்கின்றனர் என்றார்.