உணவுப் பொதியிடலுக்காக பயன்படுத்தப்படும் உக்காத பொலித்தீன்களுக்கு (Lunch Sheet) ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதன்மூலம் பொலித்தீன்களை உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகித்தல் என்பனவற்றிற்கும் தடை விதிக்கப்படவுள்ளது.
இதன்படி, தற்போது தயாரிக்கப்பட்டுள்ள பொலித்தீன்களை மட்டும் விநியோகித்து முடிப்பதற்கு ஒரு மாதகாலம் அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு விரைவில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத உக்கக்கூடிய உணவுப் பொதி செய்யும் பொலித்தீன்களை மட்டுமே தயாரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து தடைவிதிக்கப்படவுள்ள உணவுப் பொதி செய்யும் பொலித்தீன்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றதா என்பதை கண்டறிவதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் நுகர்வோர் விவகார சபை அதிகாரிகள் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
குறிப்பாக, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டின் அனைத்து கடைகளிலும் உக்கும் பொலித்தீன்களை மாத்திரமே விற்க முடியும்.
இதுபோன்ற உக்கும் பொலித்தீன்களை உணவு பொதியிடலுக்காக பயன்படுத்துவதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் நாளாந்தம் உணவுப் பொதி செய்யும் பொலித்தீன்கள் பாவனை 12 மில்லியனில் இருந்து 15 மில்லியன் வரை அதிகரித்திருப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றதாகவும், அதில் 99 சதவீதமானவை மீள் சுழற்சி செய்யப்படாது சுற்றுப்புற சூழலுக்கு கைவிடப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, உடனடியாக பாவனையில் இருந்து நீக்குவதற்கான, மேலும் எட்டு வகையான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அடங்கிய பட்டியலை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்காக குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் இன்று கைச்சாத்திட்டுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, ஒரு தடவை மாத்திரம் பாவனைக்கு உட்படுத்தப்படும் உரிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் கரண்டிகள், முள்கரண்டி, யோகட் கரண்டி மற்றும் கத்திகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் இடியப்ப தட்டுகள், பத்திகள் மற்றும் திரி ஆகியவற்றை பொதியிடும் பொலித்தீன் உறைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் ஆகியவை இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.