
அடுத்த வலுசக்தி அமைச்சராக வருபவர்,நான் தற்போது முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை வீடுத்துள்ளார்.
இலங்கையில் எரிபொருள் மற்றும் கனிய எண்ணெய் எடுப்பதற்கான பாரிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.அதற்கான சகல நடவடிக்கையையும் நான் அமைச்சராக முன்னெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ அல்லது அமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கோ பக்கசார்பாக செயற்படும் நபர் நானல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கத்தை உருவாக்க நாம் அதிக சிரமப்பட்டோம்.அதேபோல் இந்த அரசாங்கத்தில் எனக்கு வலுசக்தி அமைச்சு கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் நான் வலுசக்தி அமைச்சராக கடமையாற்றிய இந்த 11 மாதங்களில் நாட்டில் இருந்து எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளேன்.
இதனை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்வதற்கான சிறந்த நிபுணர் குழுவொன்றை நியமித்து அரசியல் தலையீடுகள் இல்லாத, அதேபோல் அமைச்சரின் அழுத்தங்கள் இல்லாத குழுவொன்றை இயங்க அனுமதித்துள்ளேன்.
இலங்கையில் எரிவாயு மற்றும் கனிய எண்ணெய் உற்பத்திக்கான அனுமதியை பெறும் சட்டத்தை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உள்ளோம்.
இவ்வாறான ஒரு நிலைமையிலேயே எனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்க்கட்சியினரால் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எனக்கு எவ்வாறான தீர்ப்பு வழங்கப்படும் என கூற முடியாது என்றார்.