செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்க்கப்படுவதாக கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
செப்டம்பர் மாதத்திற்குள் தகுதி உடைய அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எந்த ஒரு பெரிய சிக்கலும் இல்லை என்றால் நாட்டை முழுமையாக திறக்க முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.
நாட்டை தொடர்ச்சியாக மூடி வைத்திருப்பது சாத்தியமில்லை என்று கூறிய அவர், நாட்டை முழுமையாக திறக்க தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி அடிக்கடி அறிவுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, வெளிநாட்டினருக்கு நட்டை திறப்பது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்கமைய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுடன் வரும் வெளிநாட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் நாட்டிற்குள் நுழைய வாய்ப்பு வழங்கப்படும் என்று இராணுவ தளபதி தெரிவித்தார்.
இராணுவம் உட்பட மூன்று ஆயுதப்படைகளின் மருத்துவ பிரிவுகளின் முழுமையான பங்களிப்புடன் தடுப்பூசி திட்டம் நாடு முழுவதும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.