January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பொலிஸ் அதிகாரிகளாக வேடமிட்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட மூவர் கைது

பொலிஸ் அதிகாரிகள் என்ற போர்வையில் மக்களிடம் பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநாகல் மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சந்தேகநபர் ஒருவரிடமிருந்து பொலிஸ் உத்தியோகத்தரின் அடையாள அட்டையை போன்ற போலி அடையாள அட்டையொன்றும் இதன் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் குறித்த போலி அடையாள அட்டையை மக்களிடம் காண்பித்து கைது செய்வதாக அச்சுறுத்தல் விடுப்பதுடன், சன நெரிசல் குறைந்த பகுதியில் வைத்து அவர்களின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டி சாரதிகள், மோட்டார் சைக்கிளோட்டிகள் இவர்களால் இலக்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறான 17 கொள்ளை சம்பவங்களுடன சந்தேக நபர்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை, கொழும்பு – முகத்துவாரம் மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பகுதிகளில் இந்த கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனிடையே, சந்தேக நபர்களிடமிருந்து 40 கிராம் தங்கம், 2 மோட்டார் சைக்கிள்கள், 2 கை விலங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகளாக சித்தரித்துக் கொண்டு இவ்வாறு சிவில் உடையில் வருகை தரும் நபர்கள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொது மக்களை கேட்டுள்ளார்.