July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“நாட்டில் 20 வீதமானவர்களுக்கு கூட தடுப்பூசி ஏற்றப்படவில்லை” பொது சுகாதார பரிசோதகர் சங்கம்

நாட்டில் 25 வீதமான மக்களேனும் இப்போது தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும், ஆனால் 20 வீதமானவர்களுக்கு கூட தடுப்பூசி ஏற்றப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அவர் இதனை கூறினார்.

அதேபோல் நாட்டில் புதிய வைரஸ் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வுகளின் மூலமாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் அது மாறுபாடு அடைந்த கொவிட் -19 வைரஸ் பரவலா என்ற உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் நாடு வழமையான செயற்பாடுகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எந்தவித அச்சமும், கட்டுப்பாடுகளும் இல்லாது சாதாரணமாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த செயற்பாடுகள் மீண்டும் நாட்டில் நெருக்கடி நிலைமையை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே மக்கள் சுகாதார வழிகாட்டலை முறையாக பின்பற்றி செயற்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

அத்தோடு, ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. நீதிமன்ற தீர்மானம் வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் அது குறித்து எம்மால் எதனையும் கூற முடியாது என்றார்.

ஆனால், சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமையவும் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டலுக்கு அமையவும் பிரதான விடயங்கள் தவிர்ந்து ஏனைய எக்காரணம் கொண்டும் பொதுமக்களை தனிமைப்படுத்துவதையோ அல்லது நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவோ பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஏதேனும் நெருக்கடிகள் என்றால் அதனை கையாள பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினால் நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கமைய சகல பொது சுகாதார பரிசோதகர் அதிகாரிகளுக்கும் நாம் அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.