ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை 3 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக செலுத்தும் கட்டுப்பண தொகைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைய நாட்டில் நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் இதுவரை செலுத்தும் கட்டுப்பணத் தொகைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுயாதீன வேட்பாளர்கள் மாத்திரம் கட்டுப்பணம் செலுத்த வேண்டுமென்று இருந்த நடைமுறையை, அரசியல் கட்சிகளின் ஊடாக களமிறங்கும் வேட்பாளர்களும் செலுத்த வேண்டும் என்ற வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளர் ஒருவர் 75 ஆயிரம் ரூபாவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமாக செலுத்தும் நடைமுறைகே இருக்கிறது.
தேர்தல்களில் அவசியம் இன்றி வேட்பாளர்கள் களமிறக்கப்படுவதைக் கட்டுப்படுத்தி, அதிகளவு பணம் செலவிடப்படுவதையும் தடுக்கும் விதமாக கட்டுப்பணத் தொகையில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.