இலங்கையில் நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் 337,445 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரையான காலப்பகுதியில் நாள் ஒன்றில் இலங்கையில் அதிக எண்ணிக்கையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சந்தர்ப்பம் இதுவாகும்
இதில் நாட்டில் இதுவரை 4,523,770 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் இரண்டு இலட்சத்து 89,122 பேருக்கு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
மேலும், சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 32,385 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நேற்றைய தினம் 15,202 பேருக்கு ஸ்புட்னிக்-வி.யும், 700 பேருக்கு பைசரும், 36 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதுவரை 385,885 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.
அத்துடன், இதுவரை 154,003 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதலாவது டோஸும், 14,464 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன், 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.