இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்துச் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கு இடையே பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதன்படி அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிப்பவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் ஆகியோருக்கு மாத்திரமே இந்த பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த முடியுமென்று இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு பஸ் மற்றும் ரயில்களில் மாகாணங்களுக்கு இடையே பயணிப்போர் தமது பணியிட அடையாள அட்டை அல்லது தனது பயணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்தக் கூடிய ஏதேனும் ஆவணத்தை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் குறித்த ஆவணங்கள் பரிசோதிக்கப்படும் என்றும், அவ்வாறான ஆவணங்களை கொண்டிராதவர்கள் திருப்பியனுப்பப்படுவர் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மே 21 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு ஜுன் 21 ஆம் திகதியுடன் தளர்த்தப்பட்ட போதும், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்வோருக்கென இன்று முதல் மாகாணங்களுக்கு இடையே மட்டுப்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவையை நடத்த கொவிட் தடுப்புச் செயலணி அனுமதி வழங்கியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.