புலமை பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளை ஒத்திவைத்து பாடத் திட்டங்களை பூர்த்தி செய்வதற்கு வாய்ப்பினை வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி நிபுணர்களின் சாதாரணமானதும் நடைமுறைக்கு ஏற்ற ஆலோசனைகளின் அடிப்படையில் பரீட்சைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான புலமை பரிசில் ஒக்டோபர் 3 ஆம் திகதியும் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர் 4 முதல் 31 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.
எனினும் தற்போது குறித்த திகதியில் பரீட்சைகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பெருந் தொற்றுக்கு மத்தியில் அரசாங்கம் பாடசாலை மாணவர்களின் கல்வியில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டினதும் மாணவர்களினதும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு போதுமான காலத்திற்கு ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்தை மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் எதிர்கால தலைமுறையினருக்கு நியாயத்தை வழங்கும் வகையில் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை தாம் மீண்டும் வலியுறுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தமது அறிக்கையில் கூறியுள்ளார்.