July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளுக்கு ஜப்பானிடமிருந்து அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள்!

இலங்கை உள்ளிட்ட 6 ஆசிய நாடுகளுக்கும் பசுபிக் பிராந்திய நாடுகளுக்கும் கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் 11 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்க ஜப்பான் முன்வந்துள்ளது.

இந்த அறிவிப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதியுடன் ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகளே இவ்வாறு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசியின் 1.4 மில்லியன் டோஸ்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தவிர பங்களாதேஷ், கம்போடியா, ஈரான், லாவோஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு குறித்த தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

அத்தோடு ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை பெற்றுக் கொடுக்கும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கோவெக்ஸ் திட்டத்துக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களையும் 30 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளையும் வழங்குவதாக ஜப்பான் அரசு உறுதியளித்துள்ளது.

இதனிடையே, கோவெக்ஸ் திட்டத்தின் கீழ்  அமெரிக்காவிலிருந்து மேலும் 1.5 மில்லியன் “மொடர்னா” தடுப்பூசிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) இலங்கைக்கு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.