July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தப்படும் பிரிவினர் யார்?; பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் விளக்கம்

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய பிரதான பிரிவினர்கள் மட்டுமே தனிமைப்படுத்தலுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

இலங்கையில் அண்மையில் இரண்டு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமை, கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த இரண்டு சம்பவங்களில் நீதிமன்றத்தின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சங்கத்தின் அதிகாரிகளின் கைது தொடர்பில் பத்தரமுல்லை பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுதல் சட்டத்திற்கு முரணானது என்பதுடன், சமூகத்தில் பிரச்சினையை ஏற்படுத்த கூடியது என்பதால் இவ்வாறான நடவடிக்கையில் இருந்து விலகி இருக்கும்படி இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பரவலுடன் தொடர்புடைய பிரதான 3 தரப்பினர் தவிர வேறு எவரையும் தனிமைப்படுத்துதல் தொடர்பில் பொலிஸாருக்கு எந்தவொரு பரிந்துரைகளையும் வழங்காதிருக்கும்படி தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.