15 வயதான சிறுமி ஒருவர், இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரை 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஏழு பொலிஸ் பிரிவுகளில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 7 ஆம் திகதி கல்கிஸை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவல் பிரகாரம் 15 வயதான சிறுமியை இணையத்தில் விற்பனை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்தே இந்த விவகார விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரியின் நேரடி கட்டுப்பாட்டில், அவரது ஆலோசனைக்கு அமைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரநாயக்கவின் கீழ் அதன் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேணுகா தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்விசாரணைகளுக்கு சிஐடியின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவு ஊடாக விசாரணைக்கு அவசியமான உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைத்தியர்களின் கண்காணிப்பில் உடலியல் மற்றும் மானசீக சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் இரத்தினக்கல் வியாபாரி, இலங்கை கடற்படையின் இருதய சத்திரசிகிச்சை விசேட நிபுணர், இரண்டு பொலிஸ் அதிகாரி, ஒரு பாடகர் என இதுவரை 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த சிறுமி தனது சொந்த தந்தையால் 2018 இல் முதன் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் அந்த சிறுமியின் தந்தையும் அடங்கும். அதேபோல, இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, சிறுமியின் தொலைபேசி ஊடாக தொடர்ந்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தவும், ஆதாரங்களை முறையாக தாக்கல் செய்யவும் சட்டமா அதிபரினால் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஒருவரும், அரச தரப்பு சட்டத்தரணிகள் சிலரும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.