July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் ஜனாதிபதி,பிரதமரின் தீர்மானத்தை அறிவிக்கும் பணியையே செய்தேன்’

எரிபொருள் விலையேற்றம் குறித்து அமைச்சரவையில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சகல அமைச்சர்களுடனும் கலந்துரையாடி கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தை, அறிவிக்கும் வேலையையே நான் செய்தேன் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதற்கு முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பை நிதி அமைச்சரே அறிவிப்பார். முதல் தடவையாக அவர்களின் கடமையை நான் செய்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எரிபொருள் விலையேற்றம் ஜனாதிபதி தலைமையில், பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் சிலர் கூடி வாழ்க்கை செலவு பற்றிய அமைச்சரவை உப குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பதை ஜனாதிபதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு இருக்கையில் தொடர்ந்தும் இது குறித்து கேள்வி எழுப்புவது ஜனாதிபதியை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடாக அமையும் என்பதுடன்,ஜனாதிபதி கூறுவது பொய்யென ஆகிவிடும்.

ஏன் அரசாங்கத்தில் சிலர் தொடர்ச்சியாக இந்த கேள்வியை எழுப்பி ஜனாதிபதியை சந்தேகத்திற்குட்படுத்துகின்றீர்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், சரியாக ஒருவாரத்தில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நான் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது.

இது எனக்கு ஒரு பலப்பரீட்சை என்றே கூற வேண்டும்.ஏனென்றால், முன்னைய அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட ஐந்து நம்பிக்கையில்லா பிரேரணைகளில் நான்கினை நானே உருவாக்கினேன்.

அதனால்தான் இம்முறை எதிர்க்கட்சியினர் என்னை முதலாவது இலக்காக தெரிவு செய்துள்ளனர். உண்மையில் இந்த எரிபொருள் விலையேற்ற பிரச்சினையில் நான் தகவலாளியின் பணியையே செய்தேன் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ‘எனது வாழ்நாளில் நான் எதற்கும் அஞ்சியதில்லை, அரசாங்கத்தில் எத்தனை பேர் எனக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்பது தெரியாது.ஆனால் பொறுமையாக இருந்தால் 20 ஆம் திகதி பிற்பகல் நிலவரம் சகலருக்கும் தெரியவரும்.

அதேபோல், எனது அமைச்சுப் பதவி பறிபோகுமா என்ற கேள்வியை பலர் கேட்கின்றனர்.நான் பிறந்தபோது அமைச்சுப் பதவியுடன் வரவில்லை, அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்து அரசியல் செய்யும் நபரும் நானில்லை.

அதேபோல், நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிகொள்ள வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தில் சிலர் கூறுவதற்கேற்ப எனது கொள்கையை மாற்றிக் கொள்ளப் போவதும் இல்லை’ எனவும் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.