கொவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு தூதுவரிகளிடம் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, பல்கேரியா, சீஷெல்ஸ், ஈக்வடோர் மற்றும் போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களுடன் அண்மையில் நடத்தப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அணிசேரா வெளியுறவுக் கொள்கையுடன் இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளுடன் நட்புறவில் ஒத்துழைத்து வருவதனால், ஏனைய நாடுகளின் உதவியை அது எளிதாக்கும் என்று அமைச்சர் தினேஸ் குணவர்தன இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மற்றும் வணிக விவகாரங்களுக்காக உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்குமாறும் வெளிவிவகார அமைச்சர், அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த தூதுவர்களை கேட்டுக்கொண்டதாக அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.