January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இலத்திரனியல் வாகனப் பாவனையை ஊக்குவிக்கத் தீர்மானம்

இலங்கையில் இலத்திரனியல் வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்காக மூலோபாயத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுகளுக்கமைய 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை 8 மில்லியனுக்கும் அதிகமாகும்.

அவற்றில் அதிகளவான வாகனங்கள் 10 வருடங்களுக்கும் அதிமான காலம் பயன்பாட்டில் இருப்பவையாகும். அந்த பழைய வாகனங்கள் சரியான வகையில் பராமரிக்கப்படாமையால் அதிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியாவது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் வாயு மாசடைதலில் 60 வீதமானவை மோட்டார் வாகனங்களால் இடம்பெறுவதாக மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இதர நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோட்டார் வாகனப் போக்குவரத்திற்கு மீள்பிறப்பாக்க எரிசக்தியைப் பயன்படுத்துதல் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, இலத்திரனியல் வாகனப் பாவனையை ஊக்குவிப்பதற்காக மூலோபாயத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.