July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜனாதிபதியாவதற்கும் பஸில் தகுதியானவரே” என்கிறார் பொதுஜன பெரமுன செயலாளர்

எரிபொருள் விலை அதிகரிப்பு விடயத்தில் அமைச்சர் உதய கம்மன்பில மீது நாம் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மையே, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சகார காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அரசாங்கத்திற்குள் உள்ள கருத்து முரண்பாடுகளில் எதிர்கட்சியை பலப்படுத்த வேண்டிய அவசியம் எமக்கில்லையெனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பஸில் ராஜபக்‌ஷ விரைவில் எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பார் என்றும், சந்தர்ப்பம் வரும் போது அவர் நல்ல பல வேலைத்திட்டங்களை முன்னெடுப்பார் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

மேலும், நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு பஸில் ராஜபக்‌ஷ தகுதியானவர் என்றும், அவர் நாட்டின் பொருளாதரத்தை சரியாகக் கையாண்டு இலங்கையை அபிவிருத்தியின் பக்கம் கொண்டு சென்றவர் என்பதால் அவர் மீது எமக்கு அதீத நம்பிக்கை உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தில்  கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படுவதுடன், பங்காளிக் கட்சிகளுடனும் இது குறித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள சாகர காரியவசம், அந்தப் பிரேரணையை ஆதரித்தால் இறுதியாக ஜனாதிபதி, பிரதமர் இருவரும் தவறிழைத்ததாக தவறான கருத்து பரப்பப்படலாம் என்றும் கூறியுள்ளார்.

இதனால் எதிர்க்கட்சியினரின் இத்தகைய முயற்சிகளுக்கு நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.