விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கட்டாரில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நபரொருவர் முள்ளியாவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த, 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நிலையில் 2019 ஆம் ஆண்டில் சந்தேகநபர் கட்டாருக்கு தப்பிச் சென்றிருந்ததாகவும் இதன்போது இவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் ஊடாக நீல அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அண்மையில் கட்டாரில் இருந்து இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபர், முள்ளியவளை தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த பின்னர் அங்கு சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நேற்று அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.