தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருப்பது சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் பேரிலேயே என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, குறித்த தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் பொலிஸார் எந்த தவறும் செய்யவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டுகிறார்.
புதிய கடுவெல பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொலிஸாருக்கு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.இதன்படி அவர், நோய் பரவுவதை பாதிக்கும் என்பதால் அனைத்து போராட்டங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
போராட்டக்காரர்களில் ஈடுபடுபவர்களுக்கு இது குறித்து நாங்கள் அறிவித்தோம். நாங்கள் பதாகைகளையும் வைத்தோம். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தோம்.
“அதையெல்லாம் கேட்காமல், தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறி போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாகவே பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
பொலிஸார் தங்கள் விருப்பத்தின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படவில்லை.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதகர்களினால் எழுதப்பட்ட ஆவணம் எங்களிடம் உள்ளது. அதைத்தான் நாங்கள் செய்தோம். எனவே, அதற்காக யாரும் பொலிஸாரை குறை கூற முடியாது.” என்றார்.