January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கையை காலனித்துவத்திற்குள் கொண்டு வரவே சீனா முயற்சிக்கின்றது” – விஜயதாச ராஜபக்‌ஷ

இலங்கையை தனது காலனித்துவ நாடாக மாற்றியமைப்பதற்கான நகர்வுகளையே சீனா முன்னெடுக்கின்றது என்று அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கம் இலங்கைக்கு அளவுக்கு அதிகமான நிதி உதவிகளையும் கடன்களையும் வழங்குவதானது அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான முயற்சியாக இருக்கலாம் என்றும் விஜயதாச ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டது.

இதனையடுத்து சீனாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தது.

இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க செயலாளர் தலைமையிலான தூதுக்குழுவொன்றும் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள விஜயதாச ராஜபக்‌ஷ, சீன தூதுக்குழுவின் விஜயத்தை ஆரோக்கியமானதாக கருத முடியாது என்றும், இலங்கை மீது சீனா அக்கறையுடன் நடந்துகொள்வதாக அரசாங்கம் நினைத்துக்கொண்டிருப்பது தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கு அளவுக்கு அதிகமான நிதி உதவிகளையும் கடன்களையும் வழங்கி இறுதியாக இலங்கையை தனது காலனித்துவ நாடாக மாற்றிக்கொள்வதற்கான நகர்வுகளையே சீனா முன்னெடுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாக சீனாவுடன் நெருக்கத்தை பேணும் அரசாங்கம் அமெரிக்காவின் கொள்கையின் பக்கம் இருப்பதற்கும் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் இந்த எண்ணத்தால் அமெரிக்கா – சீனாவின் முரண்பாடுகளில் சிக்கி இலங்கை துண்டாடப்படும் நிலை உருவாகும் என்றும் விஜயதாச ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கை உலக வல்லரசுகளின் காலனித்துவ நாடாக மாறுமாக இருந்தால் அது நாட்டுக்கு பாரிய அழிவுகளையே ஏற்படுத்தும் எனவும், இதற்கு இடமளிக்கப்படுமாக இருந்தால் இந்த அரசாங்கம் கூடிய சீக்கிரத்தில் வீழ்ச்சியடைந்து விடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.