அரச மற்றும் தனியார் பாடசாலை ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (12) முதல் ஆரம்பமாகியுள்ளது.
அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன்படி, நாட்டிலுள்ள 10,155 பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் அனைத்து கல்விசாரா ஊழியர்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வேலைத் திட்டம் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மிக விரைவில் பாடசாலைகளை திறக்கும் நோக்கில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் நாரஹன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளது.
நாரஹன்பிட்ட இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரும் கலந்து கொண்டனர்.