
இலங்கையின் வடக்கு- கிழக்கு பிரதேசங்களில் 1790 இடங்களை தொல்பொருள் பிரதேசங்களாக அரச செயலணி அடையாளப்படுத்தியுள்ளது.
கிழக்கின் தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாக்கவென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. ஆனால் இந்த செயலணி கிழக்கையும் தாண்டி வடக்கிலும், நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த செயலணியின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் தமிழர் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் தரப்பிலிருந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி செயலணி நிறுவப்பட்டது முதல் இதுவரை கிழக்கிலும்- வடக்கிலும் கிட்டத்தட்ட 1800 பிரதேசங்கள் தொல்பொருள் பகுதிகளாக இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டத்தின் வழியாக பெறப்பட்ட விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி செயலணி கிழக்கில் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் மூலம் இதுவரையில் 1407 இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 530 இடங்களும் அம்பாறை மாவட்டத்தில் 423 இடங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 94 இடங்களும் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், திருகோணமலை மாவட்டத்தில் முழுமையான ஆராய்ச்சிகள் இன்னும் முடியவில்லை என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 176 , மன்னார் மாவட்டத்தில் 60, கிளிநொச்சி மாவட்டத்தில் 18, யாழ்ப்பணத்தில் 79, வவுனியா மாவட்டத்தில் 50 என மொத்தமாக 383 இடங்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.