நாட்டின் பல பாகங்களில் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த வானிலை நாளை (12) பிற்பகல் 2 மணி வரை நீடிக்கும் என திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மீன்பிடித்தல் மற்றும் மீன்பிடி உள்ளிட்ட கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிக அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கொழும்பு, காலி ,களுத்துறை, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நெலுவ போன்ற பிரதேசங்கள் இதில் அடங்குகின்றன.
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிற்ற, மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்த, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, எலபாத்த, எஹெலியகொட, கஹவத்த, குருவிற்ற, நிவித்திகல, கலவான போன்ற பிரதேசங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாட்டில் மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.