
1989 ஆண்டு கல்முனை வடக்கு செயலகம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இருந்து கல்முனை 1 சி பகுதி எல்லையாக உள்ள நிலையில், கல்முனை தெற்கு பிரதேச செயலக எல்லையாக மாற்ற எடுக்கப்படும் நடவடிக்கை இன நல்லுறவைப் பாதிக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பகுதியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிநபர் ஒருவர் மேற்கொள்ளும் நடவடிக்கை தமிழ் மற்றும் முஸ்லிம் என இரு இனங்களுக்கும் இடையிலான முறுகல் நிலையை ஏற்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணிப் பிரச்சினைகள் வருகின்ற போது, அதில் தலையிடுவதற்கான அதிகாரமில்லை’ என்கின்ற விடயத்தை கூறி, கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தைச் சார்ந்தவர்கள் மக்களைத் தூண்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் அரசாங்கம் வர்த்தமானி மூலம் ஆவணம் செய்ய வேண்டும் என்றும் நிர்வாக ரீதியாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்காமையால் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளில் இழுத்தடிப்பு நிலவுவதாகவும் நாம் அமைச்சர் சமல் ராஜபக்ஷவிடம் கூறினோம்.
எந்த இனமாக இருந்தாலும், மழை நீர் கடலை சென்றடையும் வழிமுறைகளைத் தடுக்க முடியாது. இவ்வாறான பகுதிகளை ஆக்கிரமித்து, வீடுகளையும் கடைகளையும் கட்டுவதற்கு இடமளிக்க கூடாது.
இவ்வாறான பிரச்சினைகளினால், நாட்டின் பல இடங்களிலும் பேரழிவுகள் இடம்பெற்றிருக்கின்றன” என்றும் செல்வராஜா கஜேந்திரன் எம்.பி. ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கல்முனையில் அரச உத்தியோகத்தரைத் தாக்கிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரச உத்தியோகத்தர் மீதான தாக்குதல் இன முரண்பாட்டினை ஏற்படுத்தும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.