15 வயது சிறுமி ஒருவரை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் அரச வங்கியொன்றின் முன்னாள் முகாமையாளர் ஒருவரும், பொலிஸ் விளையாட்டு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தொலைபேசியின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதன்படி, 28 மற்றும் 29 ஆகிய வயதுடைய குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் இன்றைய தினம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, குறித்த சம்பவத்தின் 12 ஆவது சந்தேக நபராக பொலிஸ் விசேட படைப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினால் கைது செய்யப்பட்டதுடன், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, குறித்த சிறுமியை பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 5,000க்கும் அதிகமானவர்களை பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்வதற்கு இணையத் தளங்களின் ஊடாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.