November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அரசு – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தியத் தூதுவரை அண்மையில் சந்தித்திருந்தனர்

இந்திய அரசின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று விரைவில் நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ‘தமிழ் அவனி’ செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 21 ஆம் திகதி இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது, 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கவும் இந்தியா தலையிடவேண்டும் என்று கூட்டமைப்பினர் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்திய – இலங்கை பிரதமர்கள் இடையிலான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது

இந்தக் கலந்துரையாடலின்போது, 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என மோடி கூறியிருந்தார்.

தமிழர்களின் எதிர்பார்ப்பான சமத்துவம், நீதி, கௌரவம் மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கான நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியிருந்தார்.

நரேந்திர மோடியின் இந்த நிலைப்பாட்டை இலங்கையின் தமிழ்க் கட்சிகள் வரவேற்றிருந்தன.

இந்தப் பின்னணியிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்திய இராஜதந்திர தரப்பினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், கொவிட் -19 தொற்று நிலைமைகளில் கூட்டமைப்பினர் இந்தியாவிற்கு செல்வதோ அல்லது இந்திய இராஜதந்திரிகள் இலங்கைக்கு வருவதோ சாத்தியமற்றதாக உள்ளது.

இதனால், காணொளி தொடர்பாடல் மூலமாக பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பேச்சுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.