January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஊடக சுதந்திரத்தையும் சட்டத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்’: அமைச்சர் கெஹெலிய

இலங்கையில் ஊடக சுதந்திரத்தையும் சட்டத்தையும் குழப்பிக்கொண்டுள்ளதாகவும், அவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு அரசாங்கம் பதிலளிக்காமல் மௌனம் காக்கிறதா? என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த ஊடகவியலாளரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியார் தொவைக்காட்சி ஒன்றை அடக்குவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அது ஒரு தொலைக்காட்சியின் சந்தைப்படுத்தல் வேலை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அனுமதிப் பத்திரத்தை இடைநிறுத்துவதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமைச்சர் கெஹெலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் தனியார் ஊடகங்களில் அவதானிக்கும் முறைகேடுகள் தொடர்பில் சட்ட ஆலோசனை பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகத்தில் எங்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டு இல்லை என்றும் ஊடகங்கள் சட்ட வரையறைகளுக்கு உள்ளே செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், தொலைக்காட்சிகள் ஒழுங்கை மீறி செயற்படும் என்றால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.