அமைதியாக இருப்பதும் ஒரு வகையான அர்த்தமுள்ள குரல் கொடுப்பது தான் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவது தொடர்பாக தான் கொண்டிருந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
பஸில் ராஜபக்ஷ அல்லது வேறு யாராவது பாராளுமன்றம் வருவதற்காக தாம் இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்துக்கு குரல் கொடுக்கவில்லை என்றும் 20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை என்பது தீர்க்கமான விடயமாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஸில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டது தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அது ஜனாதிபதியின் தீர்மானம் என்றும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார சவால்களை வெற்றிகொள்ள முடியுமாயின் அது சிறந்த விடயம் என்றும் அதனை பஸில் ராஜபக்ஷவால் செய்ய முடியுமா அல்லது முடியாதா என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.