இந்தியாவில் “சிகா” வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து அந்நாட்டிலிருந்து வருகை தரும் பயணிகள் குறித்து இலங்கை விழிப்புடன் இருக்க வேண்டும் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இதுவரை சிகா வைரஸ் தொற்று இல்லாதது நமது நாட்டின் அதிர்ஷ்டம்.எனினும், இந்த வைரஸை காவும் ஏடிஸ் நுளம்புகள் இலங்கையில் காணப்படுகிறன.
எனவே இந்த வைரஸ் இலங்கை மக்களிடையே பரவ வாய்ப்புகள் உள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் முதல் முறையாக கேரள மாநிலத்தில் “சிகா” வைரஸ் பாதிப்புக்குள்ளான 14 பேர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுகாதார அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களிலும் எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளனர்.
“சிகா வைரஸ் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலங்களில் காணப்படும் ‘ஏடிஸ் இனத்திலிருந்து’ பாதிக்கப்பட்ட நுளம்புகள் மனிதரை கடிப்பதால் பரவுகிறது.
இந்த நுளம்புகள் பகலில் செயலில் இருக்கும் ஒரு இனமாகும். ஈடிஸ், ஈஜிப்டி மற்றும் அல்போபிக்டஸ் அடர்த்தி ஆகிய இரு இனங்களும் வைரஸை பரப்புவதற்கு உதவுகின்றன என்றார்.
“சிகா” வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு லேசான காய்ச்சல், சொறி, வெண்படலம், தசை மற்றும் மூட்டு வலி, உடல்நலக் குறைவு அல்லது தலைவலி ஆகிய அறிகுறிகள் காணப்படும் எனவும் இந்த அறிகுறிகள் பொதுவாக 2–7 நாட்கள் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் “சிகா” வைரஸ் தொற்று உள்ள பெரும்பாலானவர்கள் அறிகுறிகளை காண்பிக்கவில்லை என வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறினார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு “சிகா” வைரஸ் தொற்று ஏற்படுமானால் அது கருவில் உள்ள குழந்தைக்கு மைக்ரோ செபலி மற்றும் பிற பிறவி குறைபாடுகளுடன் ஏற்படுத்த கூடும். இது பிறவி “சிகா” நோய் குறி என அழைக்கப்படுகிறது.
எனவே கர்ப்பிணிப் பெண்கள் “சிகா” வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாமல் தடுப்பது மிக முக்கியமானது எனவும் வைத்தியர் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமன்றி, “சிகா” வைரஸ் தொற்று முன்கூட்டிய பிறப்பு மற்றும் கருச்சிதைவு உட்பட பிற கர்ப்பகால சிக்கல்களுடன் தொடர்புடையது என வைத்திய நிபுணர் வலியுறுத்தினார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்களின்படி, சிகா வைரஸ் உகண்டாவில் முதன்முதலில் (1947) குரங்குகளில் காணப்பட்டது.
இது பின்னர் 1952 இல் உகண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களில் கண்டறியப்பட்டது.ஆபிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் பசுபிக் நாடுகளில் சிகா வைரஸ் நோய் தொற்று பதிவாகியுள்ளது.
1960 -1980 வரை, ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் அரிதாக மற்றும் பரவலாக மனிதர்களிடையே சிகா வைரஸ் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.