“தனிமைப்படுத்தல் என்பது ஒரு சுகாதார முன்னெச்சரிக்கையாகும்.இது ஒரு தண்டனையாக அல்லது தடுப்புக் காவலாக பயன்படுத்தப்படக்கூடாது” என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொவிட் -19 தொடர்பான சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டமையை கண்டித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இலங்கை தரணிகள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இது போன்ற தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுபவர்கள் நோய் தொற்றுக்கு உள்ளான அல்லது நோய் தொற்று சந்தேகம் உடைய ஒருவருடன் தொடர்புபட்டுள்ளமையை உறுதிப்படுத்தல் அவசியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிணை வழங்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களில் வலிந்து தடுத்து வைக்கும் நடவடிக்கை தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதும் என்பதுடன், பிணையில் விடுவித்த நீதித்துறைக்கு எதிரானதுமாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள் எதிரிடையான விளைவுகளை கொண்டுள்ளதுடன், கொவிட் தொற்றுக்கு எதிரான சுகாதார அதிகாரிகளினதும் பாதுகாப்பு பிரிவினதும் கண்ணியமான முயற்சிகளை தரமிழக்க செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இவ்வாறான செயல்களில் இருந்து அதிகாரிகளை விலகியிருக்க நெறிப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபரிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கருத்து வேறுபாடுகளுக்கான சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் சுகாதார கட்டுப்பாட்டு விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்காதிருக்கும் வகையில் கொவிட் பரவல் ஒழுங்கு விதிகளை கொவிட்-19 தொற்று பரவும் அபாயமுடையவர்களிடம் மட்டும் பிரயோகிப்பதை உறுதிப்படுத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மட்டும் பொலிஸ்மா அதிபருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.