November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் கடன் வசதி!

நாட்டு மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்,விநியோகம் மற்றும் கண்காணிப்புகளை மேம்படுத்துவதற்குமாக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை 150 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி தமது உறுப்பு நாடுகளுக்கு விரைவான மற்றும் சமமான தடுப்பூசியை பெற்றுக் கொடுப்பதற்கு ஆதரவாக 2020 டிசம்பரில் தொடங்கப்பட்ட 9 பில்லியன் ஆசிய பசிபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் கீழ் இந்த கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்புதலை ஆசிய அபிவிருத்தி வங்கி ஜூலை 08 ஆம் திகதி இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்த கடன் வசதியானது சுமார் 4 மில்லியன் இலங்கையர்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை வாங்குவதற்கு நிதியளிக்கின்றது.இதன் மூலம் 2023 க்குள் நாட்டில் 80% மானவருக்கு தடுப்பூசி வழங்கும் அரசாங்கத்தின் இலக்கினை எட்ட பங்களிக்கின்றது.

இந்த திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அத்தோடு, தடுப்பூசி தொடர்பான மருத்துவ கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுதல் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவும் இந்த கடன் திட்டம் உதவுகின்றது.