இலங்கையில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் இறக்குமதியை தடை செய்யும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முடிவை புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மாற்றி அமைத்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என அரச தரப்பு தெரிவித்துள்ளது.
அத்தோடு, இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சமீபத்தில் வெளியான ஊடக அறிக்கைகள் “பொய்யானவை” என ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இரசாயன உரத்திலிருந்து சேதன உரத்திற்கு நகரும் முடிவை அரசாங்கம் இரத்து செய்யாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புதிய நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து விவாதித்துள்ளார்.
எவ்வாறாயினும், பசுமை பொருளாதாரத்திற்காக தொடங்கப்பட்ட நடவடிக்கைகளில் மாற்றங்களை செய்வதற்கான எந்தவொரு திட்டமும் இந்த விவாதங்களின் போது முன்வைக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.