July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சில தாழ்வான பகுதிகளுக்கு மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

(FilePhoto)

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற மழை வீழ்ச்சி காரணமாக களு கங்கை, களனி, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் களனி, களு, ஜின் மற்றும் நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாகவும் பல பகுதிகளில் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தின் தலைவர் சுகீஷ்வர தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், இரத்தினபுரி, குருவிட்ட, கிரியெல்ல, அயகம மற்றும் எலபத பிரதேச செயலக பிரிவுகளில் அமைந்துள்ள களு கங்கையின் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று (10) அதிகாலை 4 மணி வரையிலான நிலவரப்படி களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் இதுவரை 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தெஹியோவிட்ட, ருவான்வெல்லை, சீதாவத, தொம்பே, கடுவலை, பியகம, கொலன்னாவை மற்றும் வத்தளை பிரதேச செயலகங்களில் உள்ள களனி கங்கையின் தாழ்வான பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.