July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு; புதிய அறிவிப்பு வெளியானது

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் பொது நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகள் இன்று (10) முதல் தளர்த்தப்பட உள்ளது..

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

திருமண வைபவங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,கொவிட் தொற்றுக்கு உள்ளாகாத மரணங்களின் இறுதிக் கிரியைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் புதிய சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக இறுதிக் கிரியைகளில் 50 பேர் கலந்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகள் ‘புதிய இயல்புநிலைக்கு’ ஏற்ப இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன்,அத்தியாவசிய செயல்பாடுகளுக்காக குறைந்தபட்ச ஊழியர்களுடன் தொடர்ந்து செயல்பட முடியும் என்றும்,நிறுவனத்தின் தலைவர் இது தொடர்பான முடிவினை எடுப்பதற்கு அதிகாரம் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அத்தியாவசிய கூட்டங்கள் 25% இருக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை,மாநாடுகள், கருத்தரங்குகளை 50 பங்கேற்பாளர்களுடன் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல்,பொது போக்குவரத்து சேவைகள் 50% ஆக வரையறுக்கப்பட்ட இருக்கை கொண்டதாக நாடு முழுவதும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ள அதேவேளை,மேல் மாகாணத்திற்குள் 30% இருக்கைகளுடன் சேவைகளை செயல்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மையங்களை கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

கைபேசி விற்பனையாளர்கள், வீதியோர விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை கடைகள், மளிகைக் கடைகள், பேக்கரிகள் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் செயல்பட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொடர்பு / புகைப்பட நகல் நிலையங்கள் மற்றும் பிற சில்லறை / சேவை தொடர்பான கடைகள், தளபாட கடைகள், சலவை சேவைகள், வன்பொருள் கடைகள், நூலகங்கள், உணவகங்கள், ஸ்பாக்கள், ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு இல்லங்கள் ஆகியவை சுகாதார வழிகாட்டுதலின் கீழ் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அழகு நிலையங்கள் மற்றும் முடிதிருத்தும் கடைகள் சேவைகளை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சிக் கூடங்கள், உட்புற விளையாட்டு மையங்கள், நீச்சல் குளங்கள் இந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்காக திறந்திருக்கும் என்றும் புதிய சுற்றறிக்கை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.