நான் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் தினமும் அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை.மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.அவர்களுடைய சில கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தூக்கிச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அப்பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,
நான் நிதியமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அநேகமாக நாளாந்தம் எனது அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களை கலைப்பதற்கு நான் பொலிஸாருக்கு அழைப்பு விடுக்கவில்லை.மாறாக போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்படும் வரையில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
சில சந்தர்ப்பங்களில் அவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாக கூட இருக்கலாம். ஆனால் கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்குமான அவர்களின் உரிமைக்கு நாம் மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
அதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். கட்டாய தனிமைப்படுத்தல் என்பது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததும் சட்டத்திற்கு முரணானதுமாகும் என்றும் மங்கள சமரவீர குறித்த பதிவில் தெரிவித்துள்ளார்.
Forcible quarantine for student protestors and their elders – a wink and a nod for pro government cheer leaders. Forced quarantine is immoral and illegal! pic.twitter.com/zlV0sPYlNg
— Mangala Samaraweera (@MangalaLK) July 8, 2021